தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலத்தின் அடிப்படையில் பகுப்பவர்கள் பெரும்பாலும், பழங்காலம், இடைக்காலம், பிற்காலம், இக்காலம் அல்லது தற்காலம் என்று பிரிப்பர். அல்லது, சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் அல்லது தற்காலம் எனவும் பகுப்பர். இவை, பெருமளவிற்கு அரசியல் வரலாற்றுப் பின்னணியையே அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள். மூவேந்தர்கள் காலம் எனத் தொடங்கி, வேற்று நாட்டவராகிய ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரையிலும் குறிப்பிட்டு, அதன் பின்னர் இன்றைய இலக்கியங்களையும் குறிப்பிட்டு இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்படுகின்றன. | |||
மேற்குறிப்பிட்டனவற்றிலிருந்து சிறிது வேறுபட்டு, நீதி இலக்கியக் காலம், பக்தி இலக்கியக் காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநூற் காலம், சமய சாத்திரக் காலம் எனவும் பகுத்துத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இலக்கிய உள்ளடக்கத்தை ஒட்டிப் பகுக்கப்பட்ட பாகுபாடு இது. அவ்வக் காலத்தில் மேலோங்கியிருந்த உள்ளடக்கங்களைக் கொண்டு இவ்வாறு பகுத்துள்ளனர் எனலாம். ஆனால், குறிப்பிட்ட அவ்வவ் காலத்தேதான் அவை தோன்றின என மிக அறுதியிட்டு வரையறை செய்ய முடியாது என்று பேராசிரியர் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். பொதுவாகச் சங்க மூவேந்தர் காலத்தை அகம் - புறம் என்ற திணை இலக்கியக் காலம் என்றும், களப்பிரர் காலத்தை இருண்ட காலமென்றும், பிற்காலச் சோழர் காலத்தைக் காப்பியக் காலமென்றும், நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக் காலமென்றும், ஐரோப்பியர் காலத்தை உரைநடைக் காலமென்றும், நாடு விடுதலை பெற்ற காலத்தை மறுமலர்ச்சிக் காலமென்றும் குறிப்பிடுகின்றனர். | |||
M.S. பூரணலிங்கம் பிள்ளை தரும் பாகுபாடு மாறுபட்டது. அவர் தமது வரலாற்று அறிவையும் தமிழ்ப் புலமையையும் அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். அந்நூலில், செவ்வியல் இலக்கியக் காலம், புத்த சமணக் காலம், சமய மறுமலர்ச்சிக் காலம், இலக்கிய மறுமலர்ச்சிக் காலம், மடங்களின் காலம், ஐரோப்பியப் பண்பாட்டுச் செல்வாக்குக் காலம் என, முன்னர்க் குறிப்பிட்ட காலப் பகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பகுப்பு முறையைப் பின்பற்றியுள்ளார். | |||
பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் எழுச்சி பெற்றமையால், அவற்றைச் சமய மறுமலர்ச்சிக் காலமெனவும், சோழர் காலத்தில், காப்பியம், இலக்கண நூல்கள், உரைநூல்கள், சிற்றிலக்கியம், புராணம், சாத்திரம் எனப் பல்வேறு வகைகளில் தமிழ் இலக்கியம் சிறப்புற்றமையால் அதனை இலக்கிய மறுமலர்ச்சிக் காலமெனவும், ஐரோப்பியர் வருகைக்குப்பின் உரைநடை வளர்ச்சி, புனைகதை இலக்கியம், புதிய கவிதை மரபுகள் போன்ற புதிய அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தனவாகையால் அதனை ஐரோப்பியப் பண்பாட்டுக் காலமெனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்தப் பாகுபாடு ஒருவகையில் இலக்கியத்தின் தகுதி, தரம் என்பவற்றின் அடிப்படையிலும் (செவ்விய இலக்கியக் காலம்) இலக்கிய வகைமை வளர்ச்சியின் அடிப்படையிலும் (இலக்கிய மறுமலர்ச்சிக் காலம்), கருத்தோட்டத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான இலக்கியப் போக்குகளை உருவாக்கிய சமய மலர்ச்சியின் அடிப்படையிலும்(புத்த சமணக் காலம், சமய மறுமலர்ச்சிக் காலம், மடங்களின் காலம்) புறவுலகப் பண்பாட்டுக் கலப்பின் அடிப்படையிலும் (ஐரோப்பியப் பண்பாட்டுச் செல்வாக்குக் காலம்) செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். | |||
பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை, மாணிக்கவாசகர் காலம், சமணர் ஆட்சிக் காலம், தேவார காலம், ஆழ்வார் காலம் என்ற வகையில் பகுத்திருந்தாலும், பெரும்பாலும் நூற்றாண்டு அடிப்படையிலேயே இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளார். நூற்றாண்டு அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முறையாக எழுத முயன்றவர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களே. அவரைப் பின் தொடர்ந்து ஈழத்தைச் சார்ந்த கா. பொ. இரத்தினம் என்பார் 'நூற்றாண்டுகளில் தமிழ்' எனும் தம் நூலை எழுதினார். ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒரு நூல் என்ற வகையில் மு. அருணாசலம் விரிவான தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். | |||
தமிழ் இலக்கியம் பற்றிப் பிற மொழியாளர் அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தாம் 1972-இல் எழுதிய, சாகித்திய அக்காதெமி வெளியிடான 'தமிழ் இலக்கிய வரலாற்று நூலில்' மு. வ. கீழ்க்காணுமாறு பாகுபாடு செய்துள்ளார். | |||
1. பழங்காலம் | |||
1. சங்க இலக்கியம் (கி. மு. 500 முதல் கி. பி. 200 வரை) | |||
2. நீதி இலக்கியம் (கி. பி. 100 முதல் கி. பி. 500 வரை) | |||
3. பழைய காப்பியங்கள் | |||
2. இடைக்காலம் | |||
1. பக்தி இலக்கியம் (கி. பி. 600 முதல் கி. பி. 900 வரை) | |||
2. காப்பிய இலக்கியம் (கி. பி. 900 முதல் கி. பி. 1200 வரை) | |||
3. உரை நூல்கள் (கி. பி. 1200 முதல் கி. பி. 1500 வரை) | |||
4. புராண இலக்கியம் (கி. பி. 1500 முதல் கி. பி. 1800 வரை) | |||
3. இக்காலம் | |||
1. பத்தொன்பதாம் நூற்றாண்டு | |||
2. இருபதாம் நூற்றாண்டு | |||
மேற்கண்டவாறு பொருள் அடிப்படையில் இலக்கியங்களைப் பாகுபாடு செய்திருந்தாலும் அவ்விலக்கியங்களின் காலம் என வரும்போது, பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூற்றாண்டு கால எல்லைகளை ஏற்றுக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்று நூலை மு. வ. எழுதியுள்ளார். | |||
பேராசிரியர் தமிழண்ணல், தாம் எழுதிய 'புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலில் சங்க இலக்கியம் (திணை இலக்கியம்), நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தமிழ் இலக்கண வகை, தத்துவ இலக்கியமும் தத்துவ நூல்களும், உரை வகை, இசை நாடக இலக்கியம், சமய நோக்கு வகைகள், மறுமலர்ச்சி இலக்கியம் எனப் பாகுபாடு செய்துள்ளார். | |||
வரலாறு, இலக்கியப் பாடுபொருள், அவற்றின் வகைமை, வளர்ந்து வரும் இலக்கியப் போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்த பாகுபாடு இது. | |||
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் சங்க காலத்தை இயற்கை நெறிக்காலம் என்றும், அற நூல்கள் பெருமளவில் தோன்றிய சங்க மருவிய காலத்தை அறநெறிக் காலம் என்றும், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் முதலிய சமயங்கள் தோன்றிச் செழித்து வளர்ந்த காலத்தைச் சமய நெறிக்காலம் என்றும், சைவ சித்தாந்த சாத்திரங்கள், சித்தர்களின் தத்துவப் பாடல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தைத் தத்துவ நெறிக்காலம் என்றும், ஐரோப்பியர் வருகையால் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்தை அறிவுநெறிக் காலம் என்றும் பாகுபாடு செய்துள்ளார். இப்பாகுபாடு உள்ளடக்கத்தினுள் உறையும் தத்துவம், கோட்பாடு அடிப்படையில் செய்யப்பட்ட பாகுபாடு ஆகும்.
|
Thursday, January 7, 2010
தமிழ் இலக்கிய வரலாற்றுப் பகுப்புகள்
சமயத்தமிழ் இலக்கியங்கள் சைவம்
| பழந்தமிழ் நூல்களில் சைவம்; சைவத் திருமுறைகள்; தேவாரத் திருவாசகங்கள்; பெரியபுராணம்;சைவச் சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்; தலபுராணங்களும் பிறபுராணங்களும் எனும் தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. வைணவம் பழந்தமிழ் நூல்களில் திருமால் வழிபாடு; திவ்வியப்பிரபந்தம் - ஓர் அறிமுகம்; முதல் - ஆழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும்; திருத்தொண்டும் காதலும்; நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் ஆகிய தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சமணமும் பௌத்தமும் பழந்தமிழ் நூல்களில் சமணம்; சமணத் தமிழ்க் காப்பியங்கள்; சமண இலக்கணங்கள், நிகண்டுகள் மற்றும் உரைகள்; சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்; பழந்தமிழ் நூல்களில் பௌத்தம்; பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிறவும் ஆகிய தலைப்புகள் சமண, பௌத்த இலக்கியங்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றன. கிறித்துவம், இசுலாமியம் இக்காலக் கிறித்துவக் கவிதைளும் வழிபாட்டுப்பாடல்களும் இலக்கியங்கள்; கிறித்துவ உரைநடைப் படைப்புகள்; கிறித்துவச் சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்; இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்; இக்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனும் தலைப்புகளில் பிற்கால இஸ்லாமிய, கிறித்துவ இலக்கியங்கள் விளக்கப்படுகின்றன. |
தமிழர் வாழ்வியல் - 1
பண்பாட்டு வரலாறு - 1
பண்பாடு ஒரு விளக்கம்; மொழியும் பண்பாடும்; தமிழ்நாடு - நில அமைப்பும்
மக்களும்; பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்; தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்;
பழங்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் என்பவை இந்தப் பகுதியில்
இடம்பெறுகின்றன.
பண்பாட்டு வரலாறு - 2
காப்பியம் காட்டும் பண்பாடு; கலைகள் வளர்த்த பண்பாடு;அறநூல்கள வளர்த்த
பண்பாடு; சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு; சமண பௌத்த சமயங்கள்
வளர்த்த பண்பாடு; இசுலாம், கிறித்துவம் வளர்த்த பண்பாடு ஆகியவை பற்றி இங்குக்
கூறப்படுகின்றன.
திருக்குறள் காட்டும் வாழ்வியல் - 1
திருக்குறள் ஒரு பொதுமறை; திருவள்ளுவரும் இறைமையும்; துறவு; நட்பு
இக்காலப் புலவர்கள் இருவர்
பாரதியார் கவிதை உலகம் - 1
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு; பாரதியாரின் தேசியப் பாடல்கள்; பாரதியாரின்
தெய்வப் பாடல்கள்; பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்; பாரதியார் பாடல்களில்
சமுதாய நோக்கு; பாரதியாரின் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள் ஆகியவை
இந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன.
பாரதியார் கவிதை உலகம் - 2
பாரதியாரும் தமிழும்; பாரதியும் இந்திய விடுதலை இயக்கமும்; பாரதியாரின்
உலகளாவிய நோக்கு; பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் கூறுகள்; தமிழ்க்
கவிதை வரலாற்றில் பாரதி யுகம்; பாரதியார் வாழ்கிறார் ஆகிய தலைப்புகளில்
பாரதியாரின் கவிதை உலகம் - 2 விளக்கப்படுகிறது.
பாரதிதாசன் கவிதை உலகம் - 1
பாரதிதாசன் ஓர் அறிமுகம்; பாரதிதாசனின் சமுதாயம்; பாரதிதாசன் கண்ட பெண்
உலகம்; பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை; பாரதிதாசன் பார்வையில் குடும்பம்-1;
பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2 எனும் தலைப்புகளில் பாரதிதாசன் பாடல்கள்
அறிமுகமாகின்றன.
பாரதிதாசன் கவிதை உலகம் - 2
இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்
இக்காலக் கவிதை - I
இக்காலக் கவிதைகள் அறிமுகம்; பாரதியாரின் கவிதை (ஒரு கவிதை அறிமுகம்);
பாரதிதாசனின் கவிதை (ஒரு கவிதை அறிமுகம்); கவிமணி தேசிகவிநாயகம்
பிள்ளையின் கவிதைகள்; நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் கவிதைகள்;
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள்
இக்காலக் கவிதை - II
கண்ணதாசனின் கவிதைகள்; முடியரசனின் கவிதைகள்; ந. பிச்சமூர்த்தியின்
கவிதைகள்; சிற்பியின் கவிதைகள்; அப்துல் ரகுமானின் கவிதைகள்;
குறும்பாக்கள் (மகாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் கவிதைகள்)
சிற்றிலக்கியம் - I
சிற்றிலக்கிய அறிமுகம்; சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்; தமிழ்விடு தூது;
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி; பெரிய திருமடல்; திருக்காவலூர்க் கலம்பகம்
சிற்றிலக்கியம் - II
தக்கயாகப் பரணி; தஞ்சைவாணன் கோவை; திருமயிலை உலா; தொண்டை
மண்டல சதகம்; அற்புதத் திருவந்தாதி; பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
Thursday, October 29, 2009
காப்பிய வகைகள்
தமிழில், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், வளர்ச்சிக் காப்பியம், கலைக் காப்பியம் எனக் காப்பியம் பல வகைப்படும்.
பெருங்காப்பியம்
பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப் பெறுவது. ஐம்பெருங் காப்பியங்கள் எனப் போற்றப் பெறுவன சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியனவாம்.
சிறு காப்பியம்
சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணத்தில் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப் பெறுவது.
பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும் தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள் கருதினர்.
உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.
வளர்ச்சிக் காப்பியம்
இக்காலத்தில் இலக்கியத் திறனாய்வாளர்கள் காப்பியங்களை இருவகைப் பிரிவுகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஒன்று வளர்ச்சிக் காப்பியம், இரண்டு கலைக் காப்பியம். வளர்ச்சிக் காப்பியம் (வளர்நிலைக் காப்பியம்) என்பது பழங்கதை நிகழ்ச்சிகள் வாய்மொழியாகப் பரவிப் பல கிளைக் கதைகளைத் தன்னுள் கொண்டு உருப்பெறுவது ; ஓர் இனம் அல்லது மக்கள் கூட்டத்தால் உருவாக்கம் பெற்ற கவிஞரால் இலக்கிய வடிவமாகப் படைக்கப் பெறுவது.
பிற முதன்மையான காப்பியங்கள்
பெருங்காப்பிய இலக்கணத்தோடு பொருந்திய கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றனவும், வில்லிபுத்தூரார் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முதன்மையான காப்பியங்களுள் அடங்கும். இவற்றைத் தவிர வேறு சில காப்பியங்களும் தமிழில் காணப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டில் இரட்சணிய யாத்திரிகம், பாரதசக்தி மகா காவியம், இராவண காவியம், பூங்கொடி காப்பியம் போன்ற காப்பியங்களும் மிகச் சிறந்த காப்பியங்களாகத் திகழ்கின்றன. சான்றாக,
மகாபாரதம், இராமாயணம், ஹோமரின் இலியதம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.
கலைக் காப்பியம்
கலைக் காப்பியம் என்பது கவிஞர்தம் கற்பனையில் விளைவது. கற்பனைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களையும் அவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் கொண்டு இலக்கிய வடிவமாக வடிவெடுப்பது. இதற்குச் சான்றாக, 20ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற காவியங்களான பாரத சக்தி மகா காவியம், இராவண காவியம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.
காப்பியங்கள் - அறிமுகம்
காப்பியம்
ஒரு சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாத தொடர்புண்டு என்பர் எஸ்.வையாபுரிப் பிள்ளை. அதன்படி, காப்பியங்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அக்காலத் தேவைக்கேற்பத் தோன்றியுள்ளன.
காப்பியம் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி "நால்வகை உறுதிப் பொருள்களையும் கூறுவதாய்க் கதை பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்" என்று பொருள் கூறுகிறது. காப்பியம் என்பது உயர்ந்த குறிக்கோள் உடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தொடர்நிலைச் செய்யுள் எனலாம். காப்பியம் என்னும் சொல் சீவக சிந்தாமணியில் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது. இதனைக் ‘காப்பியக் கவிகள்’ (சீவக.சிந். - 1585) என்னும் சொல்வழி உணரலாம்.
காப்பிய இலக்கணம்
தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் காப்பியத்திற்குரிய இலக்கணம் எதையும் வரையறுக்கவில்லை. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் என்னும் நூலே காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தொடங்கிக் ‘கற்றோர் புனையும் பெற்றியது என்ப’ என அச்சூத்திரம் முடிவுறுகின்றது. அச்சூத்திரம் வருமாறு :
பெருங்காப்பிய நிலை பேசுங்காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று
ஏற்புடைத்தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்.....
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று
ஏற்புடைத்தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்.....
இந்நூற்பா உணர்த்தும் காப்பிய இலக்கணப் பொருளாவது :
- வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகியவற்றில் ஒன்றினைப் பெற்று வரும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் கொண்டதாகக் திகழும்.
- தன்னேரில்லாத தலைவனை உடையது.
- மலை, கடல், நாடு, நகர், பருவம், இருசுடர் ஆகியவற்றை உள்ளடக்கி வரும்.
- நன்மணம் புரிதல், பொன்முடி கவித்தல், புனல் விளையாட்டு, சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுதல் வேண்டும்.
- மந்திரம், தூது, செலவு, போர், வெற்றி ஆகியவற்றைப் பெற்று வரும்.
- சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பெறும்.
- இலக்கிய நயமும் பாவமும் பெற்று விளங்கும்.
- கற்றோரால் இயற்றப் பெறுவதாக அமையும்.
காப்பியக் காலம்
காப்பியக் காலம் எனத் தமிழில் எக்காலத்தையும் அறுதியிட்டுக் கூறவியலாது. கி.மு.2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் தொடங்கி கால இடைவெளி விட்டுக் காப்பியங்கள் தோற்றம் பெறுவதைக் காப்பியங்களின் கால வரலாறு உணர்த்துகின்றது. ஒரே சீராக அன்றி, நெருங்கியும் இடைவிட்டும் இருபதாம் நூற்றாண்டு வரை காப்பிய இழை காணப் பெறுகின்றதெனக் கூறுவர்.
Subscribe to:
Posts (Atom)