Thursday, October 29, 2009

காப்பிய வகைகள்


தமிழில், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், வளர்ச்சிக் காப்பியம், கலைக் காப்பியம் எனக் காப்பியம் பல வகைப்படும்.

 பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப் பெறுவது. ஐம்பெருங் காப்பியங்கள் எனப் போற்றப் பெறுவன சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியனவாம்.

 சிறு காப்பியம்

சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணத்தில் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப் பெறுவது.

பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும் தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள் கருதினர்.

உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.

 வளர்ச்சிக் காப்பியம் 
 
இக்காலத்தில் இலக்கியத் திறனாய்வாளர்கள் காப்பியங்களை இருவகைப் பிரிவுகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஒன்று வளர்ச்சிக் காப்பியம், இரண்டு கலைக் காப்பியம். வளர்ச்சிக் காப்பியம் (வளர்நிலைக் காப்பியம்) என்பது பழங்கதை நிகழ்ச்சிகள் வாய்மொழியாகப் பரவிப் பல கிளைக் கதைகளைத் தன்னுள் கொண்டு உருப்பெறுவது ; ஓர் இனம் அல்லது மக்கள் கூட்டத்தால் உருவாக்கம் பெற்ற கவிஞரால் இலக்கிய வடிவமாகப் படைக்கப் பெறுவது.

 பிற முதன்மையான காப்பியங்கள்

பெருங்காப்பிய இலக்கணத்தோடு பொருந்திய கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றனவும், வில்லிபுத்தூரார் பாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முதன்மையான காப்பியங்களுள் அடங்கும். இவற்றைத் தவிர வேறு சில காப்பியங்களும் தமிழில் காணப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டில் இரட்சணிய யாத்திரிகம், பாரதசக்தி மகா காவியம், இராவண காவியம், பூங்கொடி காப்பியம் போன்ற காப்பியங்களும் மிகச் சிறந்த காப்பியங்களாகத் திகழ்கின்றன. சான்றாக,

மகாபாரதம், இராமாயணம், ஹோமரின் இலியதம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.

 கலைக் காப்பியம்

கலைக் காப்பியம் என்பது கவிஞர்தம் கற்பனையில் விளைவது. கற்பனைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களையும் அவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் கொண்டு இலக்கிய வடிவமாக வடிவெடுப்பது. இதற்குச் சான்றாக, 20ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற காவியங்களான பாரத சக்தி மகா காவியம், இராவண காவியம் போன்ற காப்பியங்களைக் குறிப்பிடலாம்.

1 comment: